மனிதன் செய்யக் கூடிய எல்லா வகைப் பணிகளையும் எளிதாகவும் பொருட் செலவு குறைவாகவும் எந்திர மனிதன் மூலம் செய்யக் கூடிய காலம் தொடங்கி விட்டது. மனித எந்திரனியல் தொழில் நுட்பத்தில், மின்சாரம், கணினி, கட்டளை மென்பொருள் என்பன இணைந்து செயற்படுகின்றன.

றோபோ (Robot) என்ற மனித எந்திரன் உதவியோடு அறுவை சிகிச்சை செய்யும் முறைமை இப்போது நடைமுறையில் இருக்கிறது. மிகத் துல்லியமாக அதனால் செயற்பட முடியும். இது வரை இருதயத்தின் ஒற்றை வால்வு மாற்று அறுவை சிகிச்சை மாத்திரம் றோபோ மூலம் செய்ய முடிந்தது.

உலகின் முதன் முறையாக இரட்டை வால்வு அறுவை சிகிச்சையை றோபோ உதவியுடன் சென்னையில் செய்திருக்கிறார்கள். இந்தச் சாதனையை டாக்டர் ரவிக்குமார் சென்ற வருடம் நிகழ்த்தினார். இதற்காகப் பத்து கோடி பெறுமதியான றோபோ எந்திரம் அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டது.

இதயத் துடிப்பை தற்காலிகமாக நிறுத்திய டாக்டர் ரவிக்குமார் றோபோ உதவியுடன் பழுதடைந்த இரண்டு வால்வுகளையும் அகற்றிவிட்டுப் புதிய வால்வுகளைப் பொருத்தினார்.

றோபோ மூலம் இதய ஓட்டை ( Hole In the heart) அடைப்புச் சிகிச்சையைச் செய்ய முடியும். ஏழு வகை இதய நோய்களுக்கு நிவாரணம் அளிக்க முடியும். சென்னையில் டாக்டர் உதயகுமார் பயன்படுத்தும் றோபோ கருவியில் இரண்டு கைகளும் ஒரு கெமராவும் இருக்கும்.

வெட்டுவது, ஒட்டுவது, தைப்பது ஆகியவற்றை அது மிகவும் நுட்பமாகச் செய்கிறது. இதயத்தைத் திறந்து செய்யப்படும் சத்திர சிகிச்சையை (Open heart surgery) வெகு திறமையாக அதனால் செய்ய முடியும். சாதாரணமாக இதய சத்திர சிகிச்சைக்கு 22 செ.மீ நீளத்திற்கு வெட்டுப் போட வேண்டும்.

ரோபோ சிகிச்சையில் 6 செ.மீ வெட்டினால் போதும். விரைவில் வெட்டுக் காயம் குணமடையும். இரத்தப் போக்கும் மிகவும் குறைவு.

தொழிற்சாலைகளில் இரவு பகலாக உழைக்கும் றோபோக்களைக் காணலாம். அது பற்றி இவ்விடத்தில் அதிகம் எழுதும் அவசியம் இல்லை. ஏனென்றால் அவை சாதாரணமாக நாளாந்திரப் பாவிப்பிற்கு வந்துவிட்டன. வீட்டுப்பணிகளிலும் அவை ஈடுபடுகின்றன.

ஆனால் “மைக்கிறோ றொபோட்டிக்ஸ்” எனப்படும் சிறிய வண்டு போன்ற றோபோக்கள் பற்றிக் குறிப்பிடவேண்டும். சின்னஞ் சிறிய றோபோக்கள் மனிதர்கள் கைவிரல் விட முடியாத துவாரங்கள், குழாய்களுக்குள் நுளைந்து செல்கின்றன.

சுத்தம் செய்தல், நிலவரத்தை அறிவித்தல், அடைப்பு எடுத்தல், வெப்பம், நஞ்சு வாயு என்பனவற்றைப் பொருட்படுத்தாது ஆய்வு செய்தல் போன்ற பணிகளுக்கு இந்தச் சிறிய ரக றோபோக்கள் பயன்படுகின்றன.

இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகளில் மைக்கிரோ றோபோட்டிக்ஸ் (Micro Robotics) பயன்படுத்தப் படுகிறது வேவு பார்த்தல், மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்தல் போன்றவற்றில் அவை ஈடுபடுத்தப்படுகின்றன. சுவரில் ஏறுவதற்கும் பள்ளத்தில் இறங்குவதற்கும். ஏற்ற விதத்தில் இவை வடிவமைக்கப்படுகின்றன.

மனிதர்களைப் போல் தவறுகளை அடையாளம் கண்டு தன்னைத் தானே திருத்தம் செய்யும் திறமையுள்ள றோபோவை சுவற்சர்லாந்தின் சூறிச் பல்கலைக் கழகம் (Zurich University) உருவாக்கியுள்ளது. இது புதிய தலைமுறை றோபோக்களைத் தோற்றுவிக்கும் என்று நம்பப் படுகிறது.

இந்த றோபோவுக்கு ஈசீசீஐ (Ecci) என்று பெயரிடப்பட்டுள்ளது. வரலாற்றில் முதன் முறையாக இந்த எந்திரமனிதனின் உடலில் விசேட பிளாஸ்ரிக் கலவையில் உருவாக்கப்பட்ட தசைநார்கள், எலும்பையும் தசையையும் இணைக்கும் நாண்கள் (Tendons) மற்றும் எலும்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதனுடைய அசைவியக்கத்திற்கு மேற்கூறியவை உதவுகின்றன. இந்த எந்திர மனிதனின் தலை உட்புறத்தில் கணினி அடிப்படையில் இயங்கும் முளை வைக்கப்பட்டுள்ளது. உடலை வழிநடத்தவும் தவறு விட நேர்ந்தால் அதைத் திருத்தவும் இந்த மூளை உதவுகிறது.

தவறுத் திருத்தத்திற்கு உதாரணங்கள். கால் தடக்கினால், அது எப்படி ஏற்பட்டது என்று மதிப்பீடு செய்து அந்தத் தவறை மீண்டும் செய்யாதிருத்தல். ஏதனையும் தவறுதலாகப் போட்டால் அதைக் குனிந்து எடுப்பதற்கும் இந்த முளை உதவுகிறது.

இந்த றோபோவுக்கு நெற்றியில் ஒரு கண் பொருத்தப் பட்டுள்ளது. மனிதர்களுடைய இரு கண்களுக்கு நிகரான வலுவுடன் அது செயற்படுகிறது. மனித அறிவுக்கு நிகரான செயற்கை அறிவை (Artificial Intelligence) உருவாக்கும் முயற்சியில் இந்த றோபோ ஆரம்பகட்டமாகப் பார்க்கப் படுகிறது.

இந்த றோபோவில் பொருத்தப்பட்ட கைகள் மனிதர்கள் இந்த உறுப்பை இழக்கும் பட்சத்தில் அதற்கு மாற்றீடாகப் பொருத்தக் கூடிய விதத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த றோபோவின் உருவாக்கத்திற்குப் பல மில்லியன் டாலரும் மூன்று வருட காலமும் எடுத்ததாகத் தெரிவிக்கப் படுகிடுகிறது.


© 2010 Tamil Kathir Portal · Powered by wwwl