உலகின் பெரும் வல்லரசுகள் முதல் சிறு இனக் குழுமங்கள் வரை தம்மால் வெல்ல முடியாத எதிரியைப் பலவீனப்படுத்தும் கருவியாக அவர்களுக்குள்ளிருந்தே ஒன்று அல்லது சில எதிர்க் குழுக்களை உருவாக்கி, அவர்களை வளர்த்துவிட்டு மோதவிடும் தந்திரோபாயத்தையே பெரிதும் சார்ந்திருக்கின்றக.
இந்தத் தந்திரோபாயத்தை சிங்கள அரசுகள் திறமாகவே முன்னெடுத்து வருகின்றன. தமிழ் பேசும் மக்களிடையேயான ஒற்றுமையைச் சிதைப்பதன் முதல் இலக்காக தமிழ் – முஸ்லிம் உறவு சிதைக்கப்பட்டது. இது தம்மைத் தொடர்ந்தும் பலமான நிலையில் நிலை நிறுத்துவதற்காக சிங்கள அரசு மேற்கொண்ட, மேற்கொண்டுவரும் ஒரு தொடர் முயற்சியாகவே உள்ளது.
இந்த வெற்றிகரமான பிரித்தாளும் தந்திரோபாயத்தைத் தொடர்ந்து தமிழ் மக்களது அரசியல் தளத்தில் பல்வேறு முயற்சிகள் சிங்கள தேசத்தால் மேற்கொள்ளப்பட்ட பொழுதும், சிங்கள தேசத்தின் இன மேலாதிக்க சிந்தனையையும், இன வெறிக் கொள்கைகளையும் புரிந்து கொண்ட தமிழ் மக்களின் விழிப்புணர்ச்சி இதற்கான சந்தர்ப்பங்களைத் தகர்த்தே வந்துள்ளது. அது நிறைவேறாத நிலையில், சிங்கள தேசத்தின் அடுத்த நகர்வு தமிழ்த் தேசியத்தின் பலவீனமான பக்கம் திரும்பியது.
![]()
தமிழ்ச் சமூகத்தினுள் புரையோடிப்போயிருந்த சாதியப் பிளவுகளையும், உயர்ந்தவர் – தாழ்ந்தவர் வேறுபாடுகளையும் சிங்கள தேசம் கையிலெடுத்து அதனை ஊதிப் பூதாகரமாக்கிப் பிளவுகளை உருவாக்க முயன்றது. அதனையும் தமிழ்ச் சமூகம் நேர்த்தியாகக் கையாண்டு தடுப்பரண் போட்டது. சாதிய ஏற்ற தாழ்வுகளும், சமுதாய உள் முரண்பாடுகளும் நீதியற்றது என்ற கருத்துருவாக்கம் பெரும்பாலும் தமிழ்ச் சமுதாயத்தினுள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கெதிரான போராட்டங்களும் நடைபெற்றது.
ஆனாலும், பிளவு படுத்தும் குறிக்கோளோடு சிங்களம் மேற்கொண்ட இந்தத் தந்திரோபாய நகர்வுகளுக்குள் சிலர் வீழ்ந்துவிட்டாலும், அது சிங்களத்தின் நோக்கத்தினை நிறைவேற்றும் அளவிற்குப் பலம் பெறவில்லை.
இதன் பின்னர் உருவான கள நிலமை தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக அமைந்ததனால், சிங்கள தேசம் திகைத்து நின்றது. சிங்கள அரசாலும், அதன் குண்டர் படைகளாலும் தமிழ் மக்கள் மீது அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் தமிழர்கள் தமக்கிடையேயான முரண்பாடுகளுக்கும் அப்பால் அணி திரளவேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது.
சிங்கள தேசியவாதத்திற்கும், சிங்கள தேசியத்தின் தமிழர் மீதான இனக் குரோத, இன வன்முறை நடவடிக்கைகளாலும் பாதிப்புற்ற தமிழர்கள் மத்தியில் தோன்றிய இளைஞர்கள் எழுச்சி இந்த அணி திரள்தலை உறுதிப்படுத்தியது. மாணவர் அமைப்புக்களும், இளைஞர் அமைப்புக்களும் இணைந்ததொரு தமிழ்த் தேசிய சக்தி எழுச்சி கொண்டதனால் சிங்களத்தினால் தமிழர்கள் மத்தியில் ஊடறுத்து உள் நுழைவது சாத்தியமற்றதாகப் போய்விட்டது.
ஆனால், இந்த தமிழ் இளைஞர்களது அணி திரள்தலை இந்திய அரசு தனது நலனுக்காகக் கையாளும் திட்டத்தை வெகு லாவகமாகக் கையாண்டது. சிங்களத்தின் இன வன்முறை உருவாக்கிய அணி திரள்தலை இந்திய மேலாதிக்க வன்முறையாளர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நோக்கில் பல கூறுகளாகப் பளவு படுத்தினார்கள். சிங்கள வன்முறைக் கடலில் வீழ்ந்து உயிர் வாழ்தல் போராட்டத்தை நடாத்திய தமிழ் இளைஞர்களை இந்திய வல்லாதிக்கம் தனித்தனி வலைகளில் பிரித்துக் கட்டிக் கரையெற்றியது.
தமிழ் இளைஞர்களது இலட்சியக் குறிக்கோள் இந்திய நலனுக்கானதாக மாற்றப்பட்டது. சிங்கள அரசின் இன மெலாதிக்க வன்முறைகளுக்கு எதிராகப் போராட இணைந்த கரங்களை இந்தியா தமித்தமியாகப் பிரித்து, தனக்காகக் கையாளத் தொடங்கியதால், தமிழ் இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.

இந்தியாவின் இந்தப் பிரித்தாளும் தந்திரத்தையும், சூழ்ச்சியையும் புரிந்து கொண்ட விடுதலைப் புலிகளால் இந்தியா மேற்கொண்ட சதி வலையை அறுத்து வெளியேற முடித்திருந்த போதும், அதற்காக விடுதலைப் புலிகளும், தமிழ் மக்களும் பெரிய விலைகளைச் செலுத்த வேண்டியதாக இருந்தது.
இந்தியாவால் தனது நோக்கங்களுக்காக வளர்க்கப்பட்ட பல பத்து ஆயுதக் குழுக்களது இலக்குத் தவறிய பயணத்தைத் தடுத்து நிறுத்தவும், தமிழ்த் தேசியத்திற்கான போராட்டம் சிதைவுகளுக்குள்ளாகாமல் காப்பாற்றவும் இந்தியாவால் உருவாக்கப்பட்ட ஆயுதக் குழுக்கள் மீது தடை விதிக்கவும், அவர்களை நிராயுதபாணிகளாக்கவும், அதை ஏற்காதவர்கள் மீது தாக்குதல்கள் நடாத்தவும் விடுதலைப் புலிகளுக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட இழப்புக்களும், அழிவுகளும் தமிழ் மக்களது இதயங்களில் வலியை ஏற்படுத்தினாலும், விடுதலைப் புலிகள் தொடர்ந்து மேற்கொண்ட தயாகப் பயணம் அந்த வலிகளை மீறின பிணைப்பை தமிழ்த் தேசியத்திற்கு வழங்கியது.
தமிழ் இளைஞர்கள் ஊடான தனது நலன் பேணும் நகர்வு விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டதனால் சீற்றம் கொண்ட இந்தியா, தருணம் பார்த்து நேரடியாகவே தரை இறங்கியது. தமிழீழ மக்களை சிங்கள அரச வன்முறையிலிருந்து காக்கப் போவதாகக் கூறித் தமிழீழ மண்ணில் கால் பதித்த இந்திய அரச படைகள், தம்மை அந்த மண்ணில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக சிறிலங்கா அரசு மேற்கொண்ட அதே பிரித்தாளும் தந்திரத்தை மேற்கொண்டார்கள். விடுதலைத் தளத்தில் தமிழீழ மக்களால் ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கு உயிரூட்டி, அவர்களைக் கொண்டு தமிழீழ நிலப் பகுதியில் ஒரு பொம்மை ஆட்சியை ஓற்படுத்தி சிங்கள அரசை மிரட்டும் காரியத்தில் அது இறங்கியதால், இந்தியப் படைகள்மீது தாக்குதல் நடாத்த வேண்டிய கட்டாயம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டது.
விடுதலைப் புலிகளின் நியாயமான, அர்ப்பணிப்புடன் கூடிய இந்தப் புதிய போர்க் களத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பின்னால் அணி வகுத்த காரணத்தால் இந்தியப் படைகள் களத் தோல்வியுடனும், அவமானத்துடனும் மீண்டும் இந்தியாவிற்கே திரும்பும் நிலை உருவானது. ஆனால், இந்தியாவின் இந்தத் துரோக நடவடிக்கைகளால் விடுதலைப் புலிகள் இன்னொரு வரலாற்றுத் தவறினுள் வீழ வேண்டிய கட்டாயத்தினுள் தள்ளப்பட்டார்கள்.

இந்தியப் படைகளுடன் விடுதலைப் புலிகள் மோதும் கால அவகாசத்தைப் பயன்படுத்தி சிங்கள அரசு தென்னிலங்கையீல் மீண்டும் உருவான இளைஞர் கிளர்ச்சியை ஆயுத முனையில் ஒடுக்கியது. தென்னிலங்கை ஆயுதக் கிளர்ச்சியை எதிரியைப் பலவீனப்படுத்தும் தமக்கான ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பத்தை இந்தியப் படைகளுடனான யுத்தம் இல்லாமல் ஆக்கிவிட்டது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தினால் உருவான இந்தத் தவறு நின்நாட்களில் தமிழீழ விடுதலைப் போரில் பெரும் தாக்கங்களை உருவாக்கியது.
விடுதலைப் புலிகளால் தோற்றடிக்கப்பட்டு, திருப்பியனுப்பப்பட்ட நிகழ்வு இந்தியாவுக்கு ஒரு பெரும் வரலாற்றுச் சவாலாகவே அமைந்தது. இதனால், தன்னால் உருவாக்கப்பட்ட ஆயுதக் குழுக்களை அரச ஆதரவு ஒட்டுக் குழுக்களாக மாற்றி சிங்கள அரசுகளுடன் இணைந்து விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் தந்திரோபாயத்தை இந்தியா மேற்கொண்டது. மீண்டும் தமிழீழ விடுதலைத் தளத்தில் சிங்களத்தின் பிரித்தாளும் தந்திரத்திற்கு இந்தியாவின் இந்தப் புதிய நகர்வு கை கொடுத்ததுடன், எதிர்த் திசைகளில் முரண்பட்டுக்கிடந்த இந்திய – சிறிலங்கா உறவு விடுதலைப் புலிகளுக்கெதிரான தளத்தில் ஒன்றிணையவும் காரணமாக இருந்தது.
இது பின்னர் இடம்பெற்ற ராஜீவ் படுகொலையுடன் இறுக்கம் பெற்றது. சிங்கள தேசிய இனவாத வன்முறைப் போக்கு விடுதலைப் புலிகளின் பின்னாலான தமிழீழ மக்களின் அணி திரளலை ஊக்கப்படுத்திய காரணத்தால், விடுதலைப் புலிகள் வெற்றி கொள்ள முடியாத பெரும் பலமாக வளர்ந்தது. இதனால், யுத்த நிறுத்தம் என்ற சதி வலைக்குள் விடுதலைப் புலிகளை இழுத்துச் சிதைக்கும் தந்திரோபாய வலையை சிங்கள அரசு தனது நட்பு சக்திகளின் மூலம் நோர்வே ஊடாக மேற்கொண்டது. அமெரிக்கப் பின்னணியுடனும் இந்திய ஆதரவுடனும் மேற்கொண்ட இந்தச் சதி வலையே தமிழீழ மக்களின் எதிர் காலத்தைக் குருடாக்கும் இன்றைய நிலைக்குக் காரணமாகவும் அமைந்தது.
யுத்த நிறுத்த காலத்தைப் பேச்சுவார்க்தைகள் மூலமாக இழுத்தடித்து, கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்ட சிங்கள அரசு விடுதலைத் தளத்தில் பல கருணாக்களை உருவாக்கியது. எதிரிகளை வெகு சாமர்த்தியமாகக் கையாண்டு வெற்றிகளைக் குவித்த விடுதலைப் புலிகளால், துரோகிகளைச் சமாளிக்க முடியாத பெரும் துயரம் தமிழீழ விடுதலையை வெகு தொலைவிற்குத் தள்ளிவிட்டது. பல பத்தாயிரம் தமிழீழ மக்களையும், பல்லாயிரம் விடுதலைப் போராளிகளையும் இந்த சமாதானச் சதிக்குத் தமிழீழம் விலையாகக் கொடுத்தது. சிங்களத்தின் பிரித்தாளும் சதியினுள் வீழ்ந்த கருணாக்கள் பலர் சிங்களத்துடன் இணைந்தே தமிழீழத்தைச் சுடுகாடாக்கினர்.

2009 மே 18 ஆம் திகதி அந்த மண்ணில் மூன்று தசாப்தங்களாக ஓங்கி எரிந்த விடுதலைத் தீ அங்கிருந்து முற்றாக அகன்று போனது. ஆனாலும், அந்தத் தீ புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மூர்க்கமாகப் பற்றிக் கொண்டது. இது சிங்களம் எதிர்பார்க்காத புதியதொரு சிக்கலாகவும் அச்சுறுத்தலாகவும் மாற்றம் பெற்றது. இங்கே சுடர்விட்டு எழும் தமிழீழ விடுதலைத் தீயை ஆயுதம் கொண்டு அடக்க முடியாத சிங்கள அரசு, தமது வலுவான தந்திரோபாயமான பிரித்தாளும் திட்டத்தை அரங்கேற்றி வருகின்றது.
இதில், பலியானவர்களும், துணை போனவர்களும் ஏராளம் எனபதால், அவர்கள் குறித்த வாதங்களை விட்டுவிட்டு, இதிலிருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் தப்பித்துத் தமிழீழ விடுதலைக்கான தமது பயணத்தை திசை மாறாமல் வேகமாக முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாக உள்ளது.
சிங்கள தேசத்தின், சிங்கள அரசுகளின் கடந்த கால நடவடிக்கைகளை அவதானிக்கும் எவரும் எமது கருத்துக்களை மறுக்க மாட்டார்கள் என்பது திண்ணம். தமிழீழ மண்ணில் ஆயுதம் ஏந்திய விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சிங்களம் செலுத்திய விலை அதிகம். எதிர்கொண்ட இழப்புக்களும் அதிகம். எனவே, எந்தத் தருணத்திலும் மீண்டும் ஒரு எழுச்சி தமிழீழ மண்ணில் உருவாகுவதை சிங்கள தேசம் அனுமதிக்கப் போவதில்லை.
தளத்தில் அதற்கான சாத்தியப்பாடுகளை இல்லாமல் செய்வதற்கான அனைத்து முறைமைகளையும் சிங்கள அரசு அத்துமீறி மேற்கொண்டு வருகின்றது. அது போலவே, புலத்திலும் தமிழீழ விடுதலை சார்ந்த முன்னெடுப்புக்கள் வளர்ந்து செல்வதையொ, பலம் பெறுவதையோ சிங்கள தேசம் பார்வையாளராக இருந்து அனுமதிக்கப் போவதில்லை.
சிங்கள அரசு எதைச் செய்யும்? அது எப்படியான முன்நகர்வுகளை மேற்கொள்ளும்? அதை எப்படிப் புலம்பெயர் தமிழர்கள் முறியடிக்கப் போகின்றார்கள்? என்பதிலேயே தமிழீழ விடுதலையின் எதிர்காலம் தங்கியுள்ளது.

தமிழீழ மண்ணில் விடுதலைப் புலிகளின் அனைத்துக் கட்டுமானங்களும் சிங்கள தேசத்தால் நொருக்கப்பட்டு விட்டது என்பதை நாம் மறுதலிக்கப் போவதில்லை. ஆனால், விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டுமானங்கள் சிங்கள தேசத்தால் சிதைக்க முடியாத பலத்தோடுதான் இப்போதும் உள்ளது. விடுதலைப் புலிகளுக்கான புலம்பெயர் ஆதரவுத் தளத்தில் சோர்வுகள் காணப்பட்டாலும், சரிவுகள் ஏற்படவில்லை என்பது முள்ளிவாய்க்காலின் பின்னரான புலம்பெயர் தமிழர்களின் போராட்டக் களங்கள் உறுதி செய்துள்ளன.
எனவே, சிங்கள தேசத்தின் அடுத்த நகர்வுகள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டுமானங்கள் மீதானதாகவே இருக்கும். அதுவே தற்போது நடைபெற்றுக்கொண்டும் உள்ளது.
சிங்கள தேசத்தின் இந்தச் சதி முயற்சிக்குள் தெரிந்தோ, தெரியாமலோ நாடு கடந்த தமிழீழ அரசு சார்பான சிலராவது உள்ளார்கள் என்பது அண்மைக் காலமாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்கப்பட்ட சிலரது நடவடிக்கைகள் சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்தே போகின்றது.
விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களின் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் தற்போது வெளிப்படையான தாக்குதல்களை நடாத்தத் தொடங்கியுள்ளார்கள்.
புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும், பெரும்பாலும் தமிழ் மக்களால் அவை முறியடிக்கப்பட்டே வருகின்றன. கனடாவில் இந்த முயற்சி மக்கள் ஆதரவைப் பெறாவிட்டாலும் வேகம் பெற்று வருவதை வெளிப்படையாகப் பார்க்க முடிகின்றது.
சில எதிர்நிலைத் தமிழ் இணையத் தளங்களின் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சதி முயற்சி தற்போது, சுவரொட்டிகளாக வெளிப்பட்டு வருகின்றது. ‘சங்கதி’ (http://www.sankathi.com) என்ற இணையத் தளம் இந்த எதிர்ப் புரட்சிச் சதி வலையில் முற்றாக ஈடுபட்டுள்ளது அதன் செய்திகள் மூலம் ஊர்சிதப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கனடிய பணியகமாக இயங்கிய உலகத் தமிழர் இயக்கம் மீதும், அதன் பணியாளர்கள் மீதும் இந்த இணையத் தளம் அண்மைக் காலமாக தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்த இணையத் தளம் ஒரு பக்கத்தில் மாவீரர்களது படங்களையும், தமிழீழ விடுதலை ஆதரவு செய்திகளையும் பிரசுரித்துக் கொண்டு, முரண்பாடாக உலகத் தமிழர் இயக்கம் மீது தாக்குதலைத் தொடுத்து வருகின்றது. இது முற்று முழுதாக சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுடன் நூறு வீதம் ஒத்துப் போவதை உணரக் கூடியதாக உள்ளது.
எமக்குள் உள்ள முரண்பாடுகள் எமக்குள் தீர்க்கப்பட வேண்டியவை தவிர, எமக்கிடையேயான முரண்பாடுகளை எதிரிக்கான தளமாக உருவாக்கிக் கொடுப்பது வரலாற்றுத் துரோகமாகவே அமைந்துவிடும். புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களது அரசியல் தெளிவும், தமிழீழ விடுதலை இலட்சியமும் இந்த எதிர்ப் புரட்சிகளை நிர்மூலம் ஆக்கும் என்றாலும், அதனை அவர்களது நீதி மன்னறத்திற்குக் கொண்டு செல்லும் பணியை தமிழ்த் தேசிய சக்திகள் தொடர்ந்தும் மேற்கொண்டே ஆகவேண்டும்.

சிங்களத்தின் சதி வலைக்குள் தமிழ்த் தேசிய விடுதலைக்கான எந்தத் தளமும் சிக்கிவிடக் கூடாது என்பதே தமிழ்த் தேசிய உணர்வாளர்களது அக்கறையாக உள்ளது. அதனால், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் உள் நுழையவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டார்கள்.
தமிழீழ விடுதலை நோக்கிய அந்தப் புதிய தளம் தடம் புரளக் கூடாது என்ற அக்கறையுடனேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பில் பல நியாயங்களைப் பதிவு செய்ய முயன்றார்கள். தமிழ்த் தேசிய உணர்வாளர்களது இந்த நியாயமான கோரிக்கைகள் திட்டமிடப்பட்ட வகையில் நிராகரிக்கப்பட்டதாலேயே தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அமர்வுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டார்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது வேறு, அதன் அரசு என்பது வேறு. தற்போது, நாடு கடந்த அரசாங்கத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்காக அதன் ஒரு பகுதியினர் மேற்கொண்ட ஜனநாயக விரோத நடைமுறைகளையும், அரசியல் யாப்பு விதிகளையும், அரசுக்கான ஆட்சியாளர்கள் தெரிவுகளையுமே தமிழ்த் தேசியத்தின்மீதான அக்கறை கொண்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் எதிர்த்தார்களே தவிர, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை எதிர்க்கவோ, சிதைக்கவோ முயற்சி செய்யவில்லை.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு செல்வதைத் தடுக்கும் உரிமை புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதன்படி, அவர்களால் தெரிவு செய்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளாக அவைக்கு அனுப்பப்பட்ட ஒவ்வொரு பிரதிநிதியும் அந்த மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தே ஆகவேண்டும். இது நாடு கடந்த அரசாங்கத்தை சிதைக்கும் நோக்கைக் கொண்டதல்ல. மாறாக, நாடு கடந்த அரசாங்கத்தின் தற்கால நடைமுறை அரசைச் சரியான திசை நோக்கிச் செலுத்தும் ஜனநாயக முறை மட்டுமே.
இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே, எதிர்நிலை வாதத் தளத்தில் நின்றுகொண்டு தமிழ்த் தேசிய உணர்வாளர்களை விமர்சிப்பதையும், அவர்களது உயரிய நோக்கத்தைக் களங்கப்படுத்துவதையும் தமிர்த்துவிட்டு, விடுதலைக்கான எந்தத் தளத்திலும் இணைந்து சமரசத்துடன் பயணிப்பதே அந்த மண்ணிற்காய் மரணித்த மாவீரர்களுக்கும், மக்களுக்கும் நாம் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.
- அகத்தியர்





































