வன்னியில் போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தை அனைத்துலகத்தின் கவனத்திற்கு கொண்டுவர ஈழத் தமிழ் மகன் சு. பரமேஸ்வரன் கடந்த வருடம் மேற்கொண்ட உண்ணாநிலை போராட்டத்தை கொச்சைப்படுத்திய பிரித்தானியா ஊடகங்களுக்கு எதிராக போர் தொடுத்த பரமேஸ்வரன் அதில் வெற்றிபெற்றுள்ளார்.
இது தொடர்பில் அனைத்துலக ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அதில் சிலவற்றை இங்கு தருகிறோம்.
பி.பி.சி – பிரித்தானியா
சிறீலங்காவில் போரில் துன்பப்படும் மக்கள் மீது அனைத்துலகத்தின் கவனத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் கடந்த வருடம் ஏப்பிரல் 7 ஆம் நாள் முதல் 23 நாள் உண்ணாநோன்பை பிரித்தானியாவின் நாடாளுமன்றத்திற்கு முன்பாக மேற்கொண்டிருந்தார்.
ஆனால் பரமேஸ்வரன் உணவை உட்கொண்டே உண்ணாநோன்பு மேற்கொண்டதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த சன் மற்றும் த டெய்லி மெயில் ஆகிய நாளேடுகள் தகவல் வெளியிட்டிருந்தன.
ஆனால் அதற்கு எதிராக வழக்கு தொடுத்த பரமேஸ்வரன் நேற்று (29) அதில் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு இழப்பீடாக 77,500 ஸ்ரேலிங்பவுண்ஸ்களை வழங்குமாறு நீதிமன்றம் குறிப்பிட்ட பத்திரிகைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் சாட்சியமளித்த நகர காவல்துறை அதிகாரி தாம் சிறப்பு ஒளிப்பதிவு கருவிகளை பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தமது வழக்கை மீளப்பெறுவதாக தெரிவித்துள்ள இந்த பத்திரிகைகளின் சட்ட ஆலோசகர் விக்டோரியா ஜொலீஃப் தாம் பரமேஸ்வரனிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
த சன் பத்திரிகை 30,000 பவுண்ஸ்களையும், த டெய்லி மெயில் 47,500 பவுண்ஸ்களையும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்த பத்திரிகைகளின் பொய்யான தகவல்களால் தான் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகியதாகவும், தன்னை தமிழ் சமூகம் புறக்கணித்ததாகவும் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
றொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்
பரமேஸ்வரன் மக்டொனால்ட் பர்கர் வகை உணவை உட்கொண்டதாக த சன் மற்றும் த டெய்லி மெயில் ஆகிய பத்திரிகைகள் தெரிவித்த தகவல்கள் பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தை மேற்கொண்ட பரமேஸ்வரன் ஐந்து நாட்கள் வைத்தியசாலை சிகிச்கைகளையும் பெற்றிருந்தார். பிரித்தானியாவின் பத்திரிகைகள் வெளியிட்ட தகவல் பரமேஸ்வரனின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி உள்ளதாக அவரின் வழக்கறிஞர் மக்னஸ் பொய்ட் தெரிவித்துள்ளார்.
தாம் வெளியிட்ட தகவல்கள் பொய்யானவை என்பதை இந்த இரு பத்திரிகைகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. பரமேஸ்வரன் போராட்டத்தின் போது உணவு எதனையும் உட்கொள்ளவில்லை என்பதே உண்மையானது என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
பரமேஸ்வரனுக்கு இழப்பீட்டையும், சட்ட நடவடிக்கைகளுக்கு செலவான தொகைகளையும் வழங்க இந்த இரு பத்திரிகைகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம்
பரமேஸ்வரனுக்கு எதிராக பொய்யான செய்திகளை வெளியிட்ட பிரித்தானியா பத்திரிகைகள் அவருக்கு இழப்பீடாக 80,000 பவுண்ஸ்களை (95,000 ஈரோ அல்லது 125,000 டொலர்கள்) செலுத்த இணக்கம் தெரிவித்துள்ளன.
29 வயதான பரமேஸ்வரன் பர்கர் வகை உணவை உட்கொண்டதாக இந்த இரு பத்திரிகைகளும் பொய்யான தகவல்களை வெளியிட்டிருந்தன.
நான் எனது போராட்டத்தில் உணவு எதனையும் உட்கொள்ளவில்லை, இந்த பத்திரிகைகள் வெளியிட்ட தகவல்களால் நான் எனது சமூகத்தில் இருந்து புறம்தள்ளப்பட்டேன், அது எனக்கு அதிக மன வேதனையை ஏற்படுத்தியதாக பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தனக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிரித்தானியா ஊடகங்களின் இந்த பொய்யான தகவல்கள் தொடர்பில் கடந்த வருடம் நவம்பர் 19 ஆம் நாள் (19.11.2009) ஈழம் ஈ நியூஸ் “எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன்(வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்)ஆகியவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து வெளியிட்டிருந்தது.
காலத்தின் தேவை கருதி அந்த நேர்காணலில் கேட்கப்பட்ட குறிப்பிட்ட கேள்வியை மட்டும் மீண்டும் உங்களின் பார்வைக்கு தருகின்றோம். முழு நேர்கணலையும் பின்வரும் இணைப்பின் (http://www.eelamenews.com/?p=31548) ஊடாக பார்க்க முடியும்.
கேள்வி : மக்கள் போராட்டம் என்றவுடன் வேறு ஒரு சிக்கல் நினைவுக்கு வருகிறது. எமது வீதிப்போராட்டம் தொடர்பாக அண்மையில் ஒரு சர்ச்சை எழுந்ததை நீங்கள் அறிநதிருப்பீர்கள். லண்டனில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் “பர்கர்” சாப்பிட்டதாகக் குறிப்பிட்டு பிரித்தானிய ஊடகங்கள் சில எமது போராட்டத்தை கிண்டல் செய்திருந்தன. இந்த பின்னணியில் மீண்டும் ஒரு வீதிப்போராட்டம் எத்தகைய கவனத்தை பெறும் என்று நினைக்கிறீர்கள்?
உண்மையில் இந்த கேள்விக்கு சமூக பண்பாட்டு தளத்தில் மட்டுமல்ல வரலாற்று அடிப்படையிலும் மிக நீண்ட விளக்கத்தை பதிவு செய்ய வேண்டும். ஆனால் அதற்கு இது இடமல்ல. சம்பந்தப்பட்ட ஊடகங்களிற்கு நாம் எமது கண்டனத்தை அனுப்பியதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறோம். ஊடகங்களிற்கு என்று ஒரு அரசியல் இருக்கிறது. தாம் சார்ந்துள்ள சித்தாந்தத்தை தூக்கிபிடிப்பதற்காக ஒரு நிகழ்வை – செய்தியை தாம் வரித்துள்ள சித்தாந்த கண்ணாடியைக்கொண்டு அதை அணுகுவார்கள். அதை மக்களிடம் அப்படியே கொண்டு போய்ச் சேர்ப்பதிலும் குறியாக இருப்பார்கள்.

மேற்குலக ஊடகங்களிற்கு அரசியலுடன் – வியாபாரமும் சேர்ந்து இருக்கும். பல பிரித்தானிய ஊடகங்களின் பங்குதாரர்களாக பெரு முதலாளிகள் இருக்கிறார்கள். சிறீலாங்காவிற்கு எதிரான எமது பரப்புரையில் பல பிரித்தானிய முதலாளிகள் பாதிப்புக்குள்ளாகினார்கள். உதாரணம் “மார்க் அன்ட் ஸ்பென்சர்”. அதுமட்டுமல்ல ஐரோப்பாவின் ஜிஎஸ்பி வரிச்சலுகை தொடர்பான பிரச்சினையிலும் முதலாளிகள் பாதிப்புக்குள்ளாகினார்கள். விளைவு தமது பங்குதாரர்களான முதலாளிகளை மீட்க வேண்டிய கட்டாயம் மே;றபடி சில ஊடகங்களிற்கு உடனடித் தேவையாக இருந்தது. விளைவு பரமேஸ்வரன் மில்லியன் பவுண்டுக்கு “பர்கர்” சாப்பிட்டார்.
பிரித்தானிய ஊடகங்களின் மேற்படி செய்தி தொடர்பான புரிதலின் அடிப்படையே தவறானது. நாம் பரமேஸ்வரன் “பர்கா”; சாப்பிட்டார் என்று வைத்துக்கொண்டே இந்தப்பிரச்சினையை ஆராய்வோம். லண்டனில் ஒன்றுகூடிய இலட்சக்கணக்கான தமிழர்களில் பரமேஸ்வரன் ஒருவர். என்ன வித்தியாசம் என்றால் அவர் தினமும் அந்த ஆர்ப்பாட்த்தில் இருந்தார் அவ்வளவே.அவர் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் நோக்கம் சிறீலங்காவில் போரை நிறுத்துவதே.
ஆனால் மேற்படி ஊடகங்கள் பரமேஸ்வரனுக்காகவே மக்கள் அந்த இடத்தில் கூடியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் செய்தியை திரித்து கோல்மால் செய்திருந்தன. இதை ஒரு வகையில் காலனித்துவ சிந்தனையிலிருந்து மீள முடியாத சில பிரித்தானியர்களின் மனநோயாகவும் நாம் பார்க்கலாம்.
நடந்து முடிந்த இனப்படுகொலையைக் கூட கவனத்தில் கொள்ளாமல் முதலாளித்துவ சிந்தனையை வெளிப்படுத்திய அந்த ஊடகங்களிற்கு எதிராக உடனடியாகவே பிரித்தானியாவாழ் தமிழ்மக்கள் போராடியிருக்க வேண்டும். அதைச் செய்யாதது கவலைக்குரியது. எனவே நாம் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதற்கு மேற்படி நிகழ்வை கவனத்தில் கொள்ளவேண்டிய தேவை இல்லை.
இறுதியாக, எமது மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பிரித்தானியா ஊடகங்களுக்கு எதிராக மீண்டும் போராடிய ஈழத்தின் புதல்வன் பரமேஸ்வரன் பெற்ற வெற்றி தொடர்பில் வீரகேசரி வாரஏட்டின் அரசியல் பத்தி எழுத்தாளரும், அரசியல் ஆய்வாளருமான திரு இதயச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு:
தம்பி பரமேஸ்,
யாரையா நீ? எங்கள் திலீபனின் கால் தடம் பதித்த மண்ணில் பிறந்தவனடா? உன்னில் எமக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. புலம் பெயர் நாட்டில் எமக்கு கிடைத்த முதல் வெற்றி. எம்மவர் சிலர் உன்னை தூற்றினர்.
இப்போது வாயடைத்து நிற்கின்றனர். இந்த போராளி அண்ணன் எப்போதும் உனக்கு துணையாக நிற்பான்.
‘போர்க்குணம் மிக்கவன் வீழ்வதில்லை.
வீழ்ந்தாலும் மறுபடியும் எழுவான் ‘
ஆனால், எழத்தெரியாதவன் போராடக்கூடாது. சிங்களத்தின் காலை நக்கப் பழகவேண்டும்.
சோர்ந்து கிடக்கும் எம் மக்களுக்கு, உங்கள் போராட்டம் புத்துணர்ச்சி தரும் என்று நம்புகிறேன்.


